படித்ததில் ரசித்தது

பணம் மட்டும் குறிக்கோள் என்றால்
வேறு தொழில் சென்றிருப்பேன்…
மக்கள் அகம் தேடி வேண்டி விரும்பி இங்கு நானும் ஓடி வந்தேன்…

விழி பார்த்து நோயறிவேன்
எவர் பேசும் மொழி பாரேன்..

நாவின் நிறம் பார்த்து நோயறிவேன்
அவர் தம் வாழ்வின் தரம் பாரேன்..

நோயர் நடை கொண்டு நோயறிவேன்…
அவர் அணிந்து வந்த உடை பாரேன்….

உன் வியாதி குறித்து கேள்வி கேட்பேன்
“நீ என்ன ஜாதி?” கேட்க மாட்டேன்…

நிதம் காணும் மக்களுக்குள்
மதம் பார்த்து பேதம் காணேன்….

உன் உடல் தொட்டு சிகிச்சை செய்யும் முன்
உன் மனதை நான் தொடுவேன்….
உன் மூளை சிந்திக்கும் சில நொடிகளில்
நீ நினைப்பதை நான் அறிவேன்…

உன் கண்ணீருக்கு பின் உள்ள வலி அறிவேன்…
உன் பட்டினிக்குப் பின் உள்ள வறுமை அறிவேன் …
உன் அமைதிக்கு பின் உள்ள ஞானம் அறிவேன்…

ஒரு நாள் உன் மனதின் சாசனத்தில் அமர்த்தப்படுவேன்…
மறுநாள் உன் காலின் கீழ் மிதிபடுவேன்…

ஒரு நாள் கடவுள் என்று போற்றப்படுவேன்…
மறுநாள் ஏகவசனத்தில் தூற்றப்படுவேன்….

நூல்களைப் படித்தால் பெறுவது ஏட்டறிவு …
மனங்களைப் படித்தால் பெறுவது பட்டறிவு…

ஏட்டறிவுடன் பட்டறிவை சரி… விகிதத்தில் கலந்தால் கிடைப்பது நான் …

நான் கடவுள் அல்ல…
நான் செருப்புமல்ல…
நான் மனமக்கள் கழுத்தில் தொங்கும் மாலையும் அல்ல…
நான் சவ ஊர்வலத்தில் தூவப்படும் பூவும் அல்ல….

நானும் உன்னைப் போல
கண்ணீர்
வலி
வேதனை
பிரிவு
இன்பம்
ஆற்றாமை

இவையனைத்துக்கும் மேல்
சக மனிதனின் அன்புக்கும் மரியாதைக்கும் ஏங்கும் சக மனிதனே….

நான் ஒரு மருத்துவன்…
அவ்வளவே….

படித்ததில் ரசித்தது